Tuesday, March 18, 2008

மரம் தங்கசாமி

புவி வெப்பமாதல், காடுகளின் அழிவு என மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி உதட்டளவில் மட்டும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தனி மனிதராக 6 ஆயிரம் மரங்கள் வளர்த்திருகிறார் விவசாயி தங்கச்சாமி.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 195 வகையான 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சூழ்ந்திருக்கும் 'கற்பகச் சோலை'யை மரம் தங்கச்சாமி (60) என்று அழைக்கப்படும் இவர் உருவாக்கி இருக்கிறார்.


பறவைகள் வரவேண்டும் என்பதற்காக பழங்கள் தரும் மரங்கள், குடிப்பதற்கு தண்ணீர்த் தொட்டி, வனவியல் விரிவாக்க மையம்போல ஆங்காங்கே மர வளர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் என் அவருடைய 'கற்பகச் சோலை' ஒரு சின்ன வனமாகவே காட்சியளிக்கிறது.







சேந்தன்குடியில், தான் உருவாக்கிய 'கற்பகச் சோலை'யில் மரக்கன்று நடும் பணியில் 'மரம்' தங்கச்சாமி (வலமிருந்து இரண்டாவதாக)

எட்டாம் வகுப்பு வரையே படித்திருக்கும் இவர் உருவாக்கியிருக்கும்'கற்பகச் சோலை'யைப் பார்ப்பதற்காக் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் இங்கு வந்து செல்கின்றனர். தோட்டக் கலைத் துறையினர், வனத் துறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள விவசாயிகள் என இங்கு வந்து செல்லும் அனைவரிடமும் தங்கசாமி சொல்லும் செய்தி ஒன்றுதான் அது "இயற்கையே கடவுள்".


தான் உருவாக்கியிருக்கும் வனம் குறித்து தங்கச்சாமி கூறியது:


இயற்கையே கடவுள் என முழுமையாக நம்புபவன் நான், எனக்கு எல்லாமே மரங்கள்தான். எல்லோரும் பழனி, சபரிமலை, வேளாங்கண்ணி எனக் கோயில்களுக்கு மாலை போட்டுச் செல்வார்கள். நான் 48 நாள்கள் விரதம் இருந்து காலை, மாலை இரு வேளைகளும் மரங்களை வணங்கி வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்குச் சென்று அங்கு வரும் விவசாயிகளுக்கு
அன்னதானம் செய்து விரதத்தை முடிப்பேன்.


அரசியல் தலைவர்கள, விஞ்ஞானிகள், பார்வையாளர்கள் என யார் இங்கு வந்தாலும் சரி அவர்கள் கையால் ஒரு மரக்கன்றை நடவைத்துவிடுவேன். இங்கிருந்து ஒரு மரத்தை வெட்ட வேண்டிய சூழல் எற்பட்டால் அதற்கு மாற்றாக இரு மரக்கன்றுகளை நட்டுவிடுவேன்.


வாழ்வதற்கான தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் இழந்து வருகிறது. சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அதிக அளவில் மரம் வளர்ப்பதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையோடு கூடிய வாழ்வுக்கு நாம் திரும்ப வேண்டும். அப்போதுதான் அழிவை எதிர்கொள்ள முடியும்" என்றார் தங்கச்சாமி.


புதுக்கோட்டை மரம் வளர்ப்போர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் தங்கச்சாமி. இவரைக் கெளரவிக்கும் வகையில், லண்டனில் 1992-ல் வெளியிடப்பட்ட 'விவசாயத்தை விவசாயிகளே தீர்மானிக்கட்டும்' என்ற ஆங்கில நூலின் அட்டையில் அவருடைய படம் வெளியிடப்பட்டது.
மரம் வளர்ப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் தங்கச்சாமி, விரைவில் 'இந்திர பிரியதர்ஷினி' விருது பெற இருக்கிறார்.


'கற்பகச் சோலை'க்கு வந்து செல்வோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய பார்வையாளர்கள் குறிப்பேடு ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. 1994-ல் இங்கு வந்து சென்ற நார்வே விஞ்ஞானி எல்லன்ஹாட்ஸ்வாங் அதில் தன் கருத்தை இவ்வாறு பதிவு செய்திருகிறார்.


"இந்தியப் பிரதமர் 'கற்பகச் சோலை'யைப் பார்த்தால் இந்தியாவின் சிக்கலைத் தீர்க்க வழி கிடைக்கும்!"

நன்றி:- கே. சுரேஷ் திணமணி