Monday, October 27, 2008

4$ பெட்ரோல் விலையால் அமேரிக்காவில் நடந்த சில நன்மைகள்

இந்த ஆண்டு ஜீன், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தை தொட்டிருந்த பெட்ரோல் விலை தற்பொழுது அமேரிக்க மற்றும் உலக பெருளாதார வீழ்ச்சியால் விலை குறைந்தாலும், உச்ச விலையும் அதன் தாக்கமும் ஒரு சில நன்மைகளை அமேரிக்காவிற்கும் ஏனைய நாட்டிற்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவைகளில் சில

  1. உலகமயமாக்கலில் அமேரிக்கர்களின் நாட்டம் குறைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 க்குள் சீனாவில் (சாங்காய்) இருந்து அமேரிக்காவிற்கு (நீயூ ஜேர்சி) சரக்குகளை கொண்டு செல்லும் செலவினம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பொருட் மேசை-நாற்காலிகள் தயாரித்து விற்கும் ஒரு சில நிருவனங்கள் தற்பொழுது உள்ளூரிலே தமது உற்பத்தியை செய்ய துவங்கிவிட்டன. தற்பொழுது ஏற்பட்டுள்ள அமேரிக்க பொருளாதரவு சரிவும், ஓபமாவும் இந்த மாற்றத்தை மேலும் துரிதபடுத்துகின்றனர்.
  2. நகரத்தில் இருந்து தெலைவிலேயே வசிக்க விரும்பும் அமேரிக்கர்கள் தற்பொழுது தங்களது அலுவலகம் இருக்கும் நகரத்துக்கு அருகாமையிலே தமது இல்லங்களை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால் பெட்ரோலுக்கு செலவிடும் பணத்தில் சற்று சேமிக்க விரும்புகின்றனர்.
  3. வாரத்திற்கு 4 நாள் வேலை! கோகோ நகரம், புளோரிடா மாகணத்தில் உள்ள பிரோவர்டு கல்லூரி கோடைகாலத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே (2007-ல் இருந்து) இயங்குகிறது. இதன் மூலம் வருடத்திற்கு $268,000 சேமிக்க இயலுகின்றது. வீட்டில் இருந்து வேலை பார்கும்(Work From Home) பழக்கமும் தற்பொழுது அதிக அளவில் ஊக்குவிக்கப்படுகின்றது.
  4. குறைந்த அளவிளான சுற்றுபுற கேடு. 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமேரிக்கர்கள், 2007 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 1.4 பில்லியன் மையில்கள் அதாவது 224,00,00,000 KM குறைவாக பயணம் செய்துள்ளனர். இது கிட்டதட்ட 64 மில்லியன் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளது.
  5. நேர்தியான சிக்கனம்! அமேரிக்காவில் இயங்கும் பொதியூர்திகள் (18 wheeler truck) மற்றும் அதன் நிருவனங்கள் பொதிகளை வினியோகிக்க மிகச்சிறந்த வழித்தடங்களை (Optimal route) கண்டரிய மென்பொருட்களை உபயோகிக்கின்றன!
  6. சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும் குறைந்தன.
  7. மேலே கூறிய காரணத்தால் வாகன காப்பீட்டு (Auto Insurance) கட்டணம் குறைந்தது.
  8. குறைந்த அளவிளான போக்குவரத்து நெரிசல்.அதனால் சற்று விரைவாக அலுவலகம் செல்ல இயன்றது.
  9. வேறும்மென வண்டியை ஒடவிட்டு காத்திருக்கும் காவல்காரர்களுக்கு அரசாங்கம் கிடுக்கு பிடி போட்டுள்ளது.
  10. குறைந்த உடற்பருமன் (Obesity) நோய்! அதிகப்படியான பெட்ரோல் விலையால் அமேரிக்க மக்கள் சைக்கிள்களை அதிக அளவில் உபயோகித்தனர் மற்றும் வெளியே சென்று கண்டதை தின்னும் பழக்கமும் சற்றே குறைந்திருந்தது. பெட்ரோல் விலையை கேலனுக்கு $1 ஏற்றினால் அமேரிக்காவில் உடற் பருமன் நோயை பெரும்மளவு குறைக்க இயலும் என்றும் அதன் மூலம் பல உயிர் இழப்புகளும் தவிர்க இயலும்.
ஒவ்வொரு தீமையும் ஒரு நன்மையோடே வருகின்றது என்பது இதை பார்தால் நம்பத்தான் தோன்றுகிறது.

Thursday, April 17, 2008

"உடற்பருமனை" போக்க முயலும் நியூயார்க் நகரம்!

மருத்துவவியலின் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் அவரது உயரத்திற்கு ஈடான எடை எவ்வளவு இருக்க வேண்டுமென்ற அளவுகோல் இருக்கிறது, இதனை உடற் பருமன் சுட்டி (அ) சுட்டு எனலாம். (Body Mass Index).

தேவையான எடைக்கு 10% அதிகமாக இருப்பவர்களை "அதிக எடை" கணக்கில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுமம் (American National Institutes of Health NIH) சேர்க்கிறது. (So, in common terms, overweight refers to an individual with a body mass index or BMI > 25)

உடற்பருமன் (Obesity) உடலின் அமைப்புத் தேவைக்கானதை விட அதிகமாக இருக்கும் உடற்கொழுப்பு; கணிப்பின்படி, இருக்க வேண்டிய எடைக்கு 30% அதிகமாக இருப்பவர்களை உடற்பருமன் கணக்கில் (obesity) மருத்துவர்கள் சேர்க்கின்றனர்.
(More commonly, obese refers to any individual with a body mass index or BMI > 30)

உதாரணமாக, 25 வயது ஆரோக்கியமுள்ள ஆணுக்கு (சராசரி தினசரி வாழ்க்கையில்) ஒரு நாளைக்கு 2400 கலோரி உணவு தேவை, ஒவ்வொரு நாளுக்கும் அவர் 500 கலோரி அதிகமாக உணவு அருந்தினால், சில மாதங்களிலேயே "அதிக எடை" குழுவிற்கு வந்துவிடுவார், ஆண்டுகள் கடப்பதற்குள் அவர் "அதிக உடற்பருமன்" நிலைக்கு வந்துவிடுவார், அத்துடன் தேவையில்லாத பல நோய்களையும் சேர்த்துக் கொண்டிருப்பார். மெக்டொனால்ட்ஸ் மற்றும் பெரும்பாலான உணவகங்களில் அவர் தினசரி உணவு அருந்தும் கட்டாயம் இருந்தால், தேவைக்கு அதிகமான கலோரி உண்ணும் நிலையிலிருந்து அவரால் தப்ப இயலாது. பெரும்பாலான வீட்டு உணவுகளுக்கும் வியாபார உணவக உணவுக்குமுள்ள பெரும் வித்தியாசம் இந்த அளவுக்கதிகமான கலோரி உணவுதான்.

வீட்டில் சமைத்து உண்பது என்பது பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கும் குதிரைக் கொம்பு போல, பெரும்பான்மையான குடும்பங்களின் உணவுக்கான மாதாந்திரச் செலவில் 40% க்கு மேல் வெளியே உண்பதற்காக செலவு செய்யப்படுகிறது. மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற உணவுத் தொடர்களும் மற்ற பல பெரும் உணவகங்களும் பரிமாறும் உணவு வகைகளில் மிகப் பெரும்பான்மையானவை அளவுக்கதிகமான கலோரி கொண்டுள்ளதால், வெளியே உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடற்பருமனும், உப்புசமும் அது சார்ந்த பல நோய்களும் கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது.

மொத்த அமெரிக்க மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பங்கானவர்களின் உடல் எடை அவர்களின் உடல் அமைப்புத் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அமெரிக்க மருத்துவ உலகமும், அரசு உடல்நல நிறுமங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.இந்த விழிப்புணர்வின் தொடர்பாக, பல்வேறு தன்னார்வ இயக்கங்களும், சூழல் ஆர்வலர்களும் அனைத்து உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவின் கலோரி அளவினைத் தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவரணப்படம் "சூப்பர் சைஸ் மீ" (Super Size Me!), மெக்டொனால்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் விற்கப்படும் அளவுக்கு அதிக கலோரியுடைய உணவினால் ஏற்படும் உடற்கேடுகளையும், அந்த உணவகங்களின் வியாபார நோக்கினால் மக்களுக்கு ஏற்படும் உடற்பருமன் தொடர்பான பிரச்சினைகளையும் மக்களிடையேயும் ஊடகங்களிடையேயும் கொண்டு சென்றது.

கடந்த ஜனவரி 22,2008 அன்று, நியூயார்க் நகர்மன்றம், நியூயார்க் நகருக்குள் உள்ள பதினைந்துக்கு மேற்பட்ட உணவகத் தொடர் கொண்டுள்ள அனைத்து உணவகங்களும், மார்ச் 31 முதல் உணவுப்பட்டியலுடன் கலோரி அட்டவணையும் வெளிப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. "உணவு தெரிந்தெடுக்கும்போது, உணவின் கலோரி அளவு மக்களின் தெரிவை கவனமாக்கும், அவர்களின் உணவும் ஆரோக்கியமாகும்" என்பதே அவர்களின் கருத்து.

நகர்மன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து, உணவக உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், "அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு" எதிரானது என வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் நீதிபதி, "மக்களின் நலனுக்கான அரசின் உத்தரவு இது என்றும் கலோரி அட்டவணைகளை உணவகங்கள் நிச்சயம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்!

இன்றைக்கு நியூயார்க் நகருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவு இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதுமே வரக்கூடும். உணவுப்பட்டியலுடன் கலோரி அட்டவணை தரப் பெறுவதால், உணவருந்தச் செல்பவர்கள் முன்னைவிட கவனத்துடன் உணவை தெரிவு செய்யும் வாய்ப்பும், உணவகங்களும் அதிக கலோரி உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான வாய்ப்புகளை அளிப்பதற்கும் இந்த முடிவு வழியளிக்கிறது. அமெரிக்காவில் கடந்த இருபதாண்டுகளில் சிறிது சிறிதாய் கூடிவந்த "உடற்பருமனை", அடுத்த இருபதாண்டுகளில் பெரிதாய் குறைக்கும் வாய்ப்பும் அளிக்கிறது.

இதே தொல்லையில், இந்தியாவும் நுழைந்து கொண்டிருக்கின்றது, மேற்கத்திய தாக்கத்தில் பீட்ஸாவும் பர்கரும் தினம் உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகையில், இது போன்ற நிகழ்வுகளின் கற்றலினால் "உடற் பருமன்" அளவுக்கு போகாமல் இருந்தால் நல்லது. மேலும், உடல் எடை, தினசரி கலோரி தேவை குறித்த விழிப்புணர்வு பெரிதும் வரவேண்டும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த "உணவு" குறித்த விழிப்புணர்வும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வுமே சரியான வழி!

உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -
1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும் உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்
3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்
4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும், தினம் உண்ணும் உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்
5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும், நேரத்தில் தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்
6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள் (நம்மில் பெரும்பான்மையானவர்கள்) குறைந்தது ஒரு மணி நேரம் நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்


சில தொடர்புடைய தொடுப்புகள்
-----------------------------
http://www.nytimes.com/2008/04/17/nyregion/17calorie.html
http://www.obesityinamerica.org/geographic.html
http://www.obesityinamerica.org/obesitybasics.html

உடற்பருமன் சுட்டி (Body Mass Index Calculator)
http://www.obesityinamerica.org/bmi_calculator.html

http://www.ext.vt.edu/pubs/nutrition/348-951/348-951.html

Super Size Me movie Introduction


Tuesday, March 18, 2008

மரம் தங்கசாமி

புவி வெப்பமாதல், காடுகளின் அழிவு என மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி உதட்டளவில் மட்டும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தனி மனிதராக 6 ஆயிரம் மரங்கள் வளர்த்திருகிறார் விவசாயி தங்கச்சாமி.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 195 வகையான 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சூழ்ந்திருக்கும் 'கற்பகச் சோலை'யை மரம் தங்கச்சாமி (60) என்று அழைக்கப்படும் இவர் உருவாக்கி இருக்கிறார்.


பறவைகள் வரவேண்டும் என்பதற்காக பழங்கள் தரும் மரங்கள், குடிப்பதற்கு தண்ணீர்த் தொட்டி, வனவியல் விரிவாக்க மையம்போல ஆங்காங்கே மர வளர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் என் அவருடைய 'கற்பகச் சோலை' ஒரு சின்ன வனமாகவே காட்சியளிக்கிறது.







சேந்தன்குடியில், தான் உருவாக்கிய 'கற்பகச் சோலை'யில் மரக்கன்று நடும் பணியில் 'மரம்' தங்கச்சாமி (வலமிருந்து இரண்டாவதாக)

எட்டாம் வகுப்பு வரையே படித்திருக்கும் இவர் உருவாக்கியிருக்கும்'கற்பகச் சோலை'யைப் பார்ப்பதற்காக் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் இங்கு வந்து செல்கின்றனர். தோட்டக் கலைத் துறையினர், வனத் துறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள விவசாயிகள் என இங்கு வந்து செல்லும் அனைவரிடமும் தங்கசாமி சொல்லும் செய்தி ஒன்றுதான் அது "இயற்கையே கடவுள்".


தான் உருவாக்கியிருக்கும் வனம் குறித்து தங்கச்சாமி கூறியது:


இயற்கையே கடவுள் என முழுமையாக நம்புபவன் நான், எனக்கு எல்லாமே மரங்கள்தான். எல்லோரும் பழனி, சபரிமலை, வேளாங்கண்ணி எனக் கோயில்களுக்கு மாலை போட்டுச் செல்வார்கள். நான் 48 நாள்கள் விரதம் இருந்து காலை, மாலை இரு வேளைகளும் மரங்களை வணங்கி வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்குச் சென்று அங்கு வரும் விவசாயிகளுக்கு
அன்னதானம் செய்து விரதத்தை முடிப்பேன்.


அரசியல் தலைவர்கள, விஞ்ஞானிகள், பார்வையாளர்கள் என யார் இங்கு வந்தாலும் சரி அவர்கள் கையால் ஒரு மரக்கன்றை நடவைத்துவிடுவேன். இங்கிருந்து ஒரு மரத்தை வெட்ட வேண்டிய சூழல் எற்பட்டால் அதற்கு மாற்றாக இரு மரக்கன்றுகளை நட்டுவிடுவேன்.


வாழ்வதற்கான தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் இழந்து வருகிறது. சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அதிக அளவில் மரம் வளர்ப்பதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையோடு கூடிய வாழ்வுக்கு நாம் திரும்ப வேண்டும். அப்போதுதான் அழிவை எதிர்கொள்ள முடியும்" என்றார் தங்கச்சாமி.


புதுக்கோட்டை மரம் வளர்ப்போர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் தங்கச்சாமி. இவரைக் கெளரவிக்கும் வகையில், லண்டனில் 1992-ல் வெளியிடப்பட்ட 'விவசாயத்தை விவசாயிகளே தீர்மானிக்கட்டும்' என்ற ஆங்கில நூலின் அட்டையில் அவருடைய படம் வெளியிடப்பட்டது.
மரம் வளர்ப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் தங்கச்சாமி, விரைவில் 'இந்திர பிரியதர்ஷினி' விருது பெற இருக்கிறார்.


'கற்பகச் சோலை'க்கு வந்து செல்வோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய பார்வையாளர்கள் குறிப்பேடு ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. 1994-ல் இங்கு வந்து சென்ற நார்வே விஞ்ஞானி எல்லன்ஹாட்ஸ்வாங் அதில் தன் கருத்தை இவ்வாறு பதிவு செய்திருகிறார்.


"இந்தியப் பிரதமர் 'கற்பகச் சோலை'யைப் பார்த்தால் இந்தியாவின் சிக்கலைத் தீர்க்க வழி கிடைக்கும்!"

நன்றி:- கே. சுரேஷ் திணமணி

Saturday, February 23, 2008

காசு வாங்காத கான்வென்ட்... அசத்தல் அரசுப்பள்ளி!

சகிப்புத் தன்மையும், அர்ப்பணிப்பு குணமும் இருந் தால் அரசுப் பள்ளியைக் கூட கான்வென்ட் ரேஞ்சுக்கு மாற்றிவிட முடியும் என்று நிரூபித்திருக் கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இருக்கிறது மாங்குடி கிராமம். சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கிறது. மாங்குடியை சுற்றியிருக்கிற பத்து கிராமங்களின் ஏழை மற்றும் நடுத் தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கு இதுதான் ஒரே பள்ளி. வழக்கமான அரசுப் பள்ளிகள் போலவே இயங்கி வந்த இங்கே மூன்றாண்டுகளுக்கு முன் ஜோதிமணி என்பவர் தலைமை ஆசிரியராக வந்த பிறகு, மளமளவென மாற்றங்கள்!





மூன்றே ஆண்டுகளில் 'யூனிஃபார்மில் அசத்தும் மாணவ-மாணவிகள், வகுப்பறை தவறாமல் பெஞ்ச்- டெஸ்குகள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் கேபிள் இணைப்புடன் கூடிய டி.வி-க்கள், வகுப்பறைக் குள்ளேயே பைப்பைத் திருகினால் குடிநீர், கம்ப் யூட்டர் கல்வி, தையல் பயிற்சி, கைத்தொழில் பயிற்சிகள்' என பள்ளியை பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜோதிமணி.

இதனால் கவரப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள்... புதுகை,தஞ்சை, சிவகங்கை மாவட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பு கொடுத்து, இந்தப் பள்ளி நடக்கும் விதத்தைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகவும் இப்பள்ளி தேர்வாகியிருக்கிறது.

''எப்படி இப்படி சாதிக்க முடிந்தது?'' என்று ஜோதிமணியிடம் கேட்டோம்.

''இந்தப் பள்ளியில 260 ஸ்டூடன்ட்ஸ் படிக்கிறாங்க. நான் வந்த புதுசில்
மாணவர்கள் மட்டுமில்லை, சில ஆசிரியர்கள்கூட பள்ளிக்கு சரியா வர்றதில்லை. பள்ளிக் கூடத்தைச் சுத்தி ஒரே காடா இருந்துச்சு. இருந்தாலும், நமக்கு குடுத்திருக்கிற வேலையைசரியா செஞ்சாஎல்லாத் தையும் மாத்தி டலாம்னு நெனைச்சேன். அதுக்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

நான் இங்கே வந்த அடுத்த மாசம் தீபாவளி... அப்ப பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு 'இந்த வருஷம் உங்க பிள்ளைகளுக்கு எடுக்கிற டிரெஸ்ஸை யூனிஃபார்மாவே எடுத்துடுங்க'னு சொன்னேன். இதில் சில குழந்தைகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனா, பெற்றோர் அப்படியே செஞ்சாங்க. அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதுக்கப்புறம் காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட் டர் வசதின்னு நீங்க இப்போ பார்க்கிறதுல முக்கால் வாசியை ஆறே மாசத்துக்குள் கொண்டு வந்துட்டோம்'' என்று சொன்னவர்,

''ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு இருந்தாலே போதும் என்கிறது கல்வித்துறை சட்டதிட்டம். நான் இங்கு வந்தபோது, எட்டாம் வகுப்பு படிக்கிறவன் தமிழைப் படிக்கவே தடுமாறினான். ஆனா, இப்ப ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவனுக்கான கல்வி அறிவைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். மாணவிகள் ஒரு வாரமானாலும்கூட ஜடையை அவிழ்த்து கட்டாம வந்துட்டிருந் தாங்க. அதை மாத்துறதுக்காக ஒரு நாள் ஒத்தை ஜடையும், மறுநாள் ரெட்டை ஜடை யும் போட்டுட்டு வரணும்னு கண்டிஷன் போட்டோம். அதுலருந்து தினசரி தலைக்கு எண்ணெய் வைத்து சுத்தமா வாரிக் கொண்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.

மாணவர்களுக் கிடையே கடிதம் எழுதும் திறனை வளர்க்கணும் கிறதுக்காக ஒவ்வொரு வகுப்பறையிலும் தபால் பெட்டிகளை வச்சிருக்கோம். ஒவ்வொரு வகுப் பிலும் மாணவர் களுக்குள்ளேயே ஒரு போஸ்ட்மேனும் போஸ்ட் மாஸ்டரும் இருக்கிறார்கள். மாணவ போஸ்ட் மாஸ்டரிடம் 50 காசு குடுத்தால் அவர் 'கார்ட் போர்டு' அட்டையிலான ஐந்து போஸ்ட் கார்டுகளைத் தருவார். ஸ்டூடன்ட்ஸ் அதை வாங்கி பக்கத்து வகுப்பிலிருக்கும் தனது தோழிக்கோ தோழனுக்கோ கடிதம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிடுவார்கள். அந்தத் தபால்களை எடுத்து உரிய மாணவரிடம் சேர்ப்பது 'போஸ்ட்மேனின்' வேலை.

மாணவர்களுக்குத் தொழிற்கல்வியைக் கத்துக் கொடுக்கிறதுக்காக வருஷத்துக்கு 5,500 ரூபாய் கொடுக்குது அரசாங்கம். அதுல சாம்பிராணி, ஊதுபத்தி செய்யுறதை சொல்லிக் குடுத்தாப் போதும்னு சொல்றாங்க. நாங்க கூடுதலாப் பணத்தைப் போட்டு ரெண்டு தையல் மெஷினை வாங்கிப் போட்டோம். தையல் பயிற்சி குடுக்குறதுக்காக ஒரு டீச்சரையும் நியமித்தோம். இப்ப எங்க பசங்கள்ல பலர் தங்களுடைய டிரெஸ்களை மட்டுமில்லாம அடுத்தவங்களுக்கும் டிரெஸ் தச்சுக் குடுக்கிற அளவு தேர்ந்துட்டாங்க. கிராமத்தினரும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுக்காட்டி என்னால இதையெல்லாம் சாதிச்சுருக்க முடியாது'' என்றார் அடக்கத்துடன்.

நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரே கம்ப்யூட்டர் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாமலிருக்க, இங்கே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்கூட கம்ப்யூட்டரை இயக்கி 'பிரின்ட்-அவுட்' எடுக்குமளவுக்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக ஒரு ஆங்கில தினசரி உள்பட நான்கு தினசரிகளை வாங்கிப் போடுகிறார்கள். இதில் ஒன்றை மாணவர்கள் செலவிலேயே வாங்கிப் போடுகிறார்கள். இவற்றில் வெளிவரும் செய்திகளை பிரேயரில் மாணவர்களே வாசித்தும் காட்டுகிறார்கள். யாராவது ஒரு ஆசிரியர் லீவிலிருந்தால் அவர் நடத்த வேண்டிய பாடம் வகுப்பறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒளிபரப்பாகிவிடும்!

தலைமை ஆசிரியர் ஜோதிமணியைப் பற்றி சக ஆசிரியரான மேகநாதன் நம்மிடம், ''இந்தப் பள்ளியில் ஜோதிமணி சாருக்குக் கீழே நாங்களும் பணிபுரிவதைப் பெருமையா நினைக்கிறோம்'' என் கிறார் நெகிழ்வுடன்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சக்திவேல், ''நாங்க படிக்கிறப்பெல்லாம் பதினோரு மணிக்குத்தான் வாத்தியாரே வருவார். இன்டர்வெலுக்கு வெளியில போனா திரும்ப வரவே மாட்டோம். 'ஏன்வரலை?'னு கேக்குறதுக்குக்கூட ஆள் இருக்காது. ப்ரௌஸிங் சென்டர் வச்சுருக்கிற எனக்கே கம்ப்யூட்டரை முழுமையாக உபயோகிக்கத் தெரியாது. ஆனா, இந்தப் பசங்க சர்வ சாதாரணமா கம்ப்யூட்டர்ல புகுந்து விளையாடுறதைப் பார்த்தா, நாங்க படிச்சப்பவே இந்த மாற்றங்கள் வரலியேனு ஏக்கமா இருக்குங்க'' என்கிறார்.

மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவரான பாலாமணி ரெங்கசாமி, ''எங்க ஊரு பிள்ளைகள்லாம் பணம் வாங்காத கான்வென்ட்ல படிச்சுக்கிட்டிருக்காங்க! இந்தப் பள்ளியோட வளர்ச்சிக்காக எதைக் கேட்டாலும் செஞ்சு குடுத்துட்டுத்தான் மறு வேலை. கூடிய சீக்கிரமே இங்கே இருக்கிற லைப்ரரி ஹாலுக்கு ஏ.ஸி. வசதி பண்ணிக் குடுக்கப்போறோம்'' என்றார் பெருமிதத்துடன்.

அர்ப்பணிப்பு உணர்வு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அரசுப் பணிகளில் அது அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், வாழும் உதாரணமாக விளங்கும் ஜோதிமணி போன்ற விதிவிலக்குகளுக்கு அரசாங்கம் நிறையவே ஊக்கமும் அங்கீகாரமும் தரவேண்டும். அதுதான் அர்ப்பணிப்புக்குத் தருகிற அற்புதமான மரியாதையாக இருக்கும்!
நன்றி :- ஜூனியர் விகடன். Feb 24-28, 2008