Thursday, April 17, 2008

"உடற்பருமனை" போக்க முயலும் நியூயார்க் நகரம்!

மருத்துவவியலின் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் அவரது உயரத்திற்கு ஈடான எடை எவ்வளவு இருக்க வேண்டுமென்ற அளவுகோல் இருக்கிறது, இதனை உடற் பருமன் சுட்டி (அ) சுட்டு எனலாம். (Body Mass Index).

தேவையான எடைக்கு 10% அதிகமாக இருப்பவர்களை "அதிக எடை" கணக்கில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுமம் (American National Institutes of Health NIH) சேர்க்கிறது. (So, in common terms, overweight refers to an individual with a body mass index or BMI > 25)

உடற்பருமன் (Obesity) உடலின் அமைப்புத் தேவைக்கானதை விட அதிகமாக இருக்கும் உடற்கொழுப்பு; கணிப்பின்படி, இருக்க வேண்டிய எடைக்கு 30% அதிகமாக இருப்பவர்களை உடற்பருமன் கணக்கில் (obesity) மருத்துவர்கள் சேர்க்கின்றனர்.
(More commonly, obese refers to any individual with a body mass index or BMI > 30)

உதாரணமாக, 25 வயது ஆரோக்கியமுள்ள ஆணுக்கு (சராசரி தினசரி வாழ்க்கையில்) ஒரு நாளைக்கு 2400 கலோரி உணவு தேவை, ஒவ்வொரு நாளுக்கும் அவர் 500 கலோரி அதிகமாக உணவு அருந்தினால், சில மாதங்களிலேயே "அதிக எடை" குழுவிற்கு வந்துவிடுவார், ஆண்டுகள் கடப்பதற்குள் அவர் "அதிக உடற்பருமன்" நிலைக்கு வந்துவிடுவார், அத்துடன் தேவையில்லாத பல நோய்களையும் சேர்த்துக் கொண்டிருப்பார். மெக்டொனால்ட்ஸ் மற்றும் பெரும்பாலான உணவகங்களில் அவர் தினசரி உணவு அருந்தும் கட்டாயம் இருந்தால், தேவைக்கு அதிகமான கலோரி உண்ணும் நிலையிலிருந்து அவரால் தப்ப இயலாது. பெரும்பாலான வீட்டு உணவுகளுக்கும் வியாபார உணவக உணவுக்குமுள்ள பெரும் வித்தியாசம் இந்த அளவுக்கதிகமான கலோரி உணவுதான்.

வீட்டில் சமைத்து உண்பது என்பது பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கும் குதிரைக் கொம்பு போல, பெரும்பான்மையான குடும்பங்களின் உணவுக்கான மாதாந்திரச் செலவில் 40% க்கு மேல் வெளியே உண்பதற்காக செலவு செய்யப்படுகிறது. மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற உணவுத் தொடர்களும் மற்ற பல பெரும் உணவகங்களும் பரிமாறும் உணவு வகைகளில் மிகப் பெரும்பான்மையானவை அளவுக்கதிகமான கலோரி கொண்டுள்ளதால், வெளியே உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடற்பருமனும், உப்புசமும் அது சார்ந்த பல நோய்களும் கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது.

மொத்த அமெரிக்க மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பங்கானவர்களின் உடல் எடை அவர்களின் உடல் அமைப்புத் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அமெரிக்க மருத்துவ உலகமும், அரசு உடல்நல நிறுமங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.இந்த விழிப்புணர்வின் தொடர்பாக, பல்வேறு தன்னார்வ இயக்கங்களும், சூழல் ஆர்வலர்களும் அனைத்து உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவின் கலோரி அளவினைத் தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவரணப்படம் "சூப்பர் சைஸ் மீ" (Super Size Me!), மெக்டொனால்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் விற்கப்படும் அளவுக்கு அதிக கலோரியுடைய உணவினால் ஏற்படும் உடற்கேடுகளையும், அந்த உணவகங்களின் வியாபார நோக்கினால் மக்களுக்கு ஏற்படும் உடற்பருமன் தொடர்பான பிரச்சினைகளையும் மக்களிடையேயும் ஊடகங்களிடையேயும் கொண்டு சென்றது.

கடந்த ஜனவரி 22,2008 அன்று, நியூயார்க் நகர்மன்றம், நியூயார்க் நகருக்குள் உள்ள பதினைந்துக்கு மேற்பட்ட உணவகத் தொடர் கொண்டுள்ள அனைத்து உணவகங்களும், மார்ச் 31 முதல் உணவுப்பட்டியலுடன் கலோரி அட்டவணையும் வெளிப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. "உணவு தெரிந்தெடுக்கும்போது, உணவின் கலோரி அளவு மக்களின் தெரிவை கவனமாக்கும், அவர்களின் உணவும் ஆரோக்கியமாகும்" என்பதே அவர்களின் கருத்து.

நகர்மன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து, உணவக உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், "அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு" எதிரானது என வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் நீதிபதி, "மக்களின் நலனுக்கான அரசின் உத்தரவு இது என்றும் கலோரி அட்டவணைகளை உணவகங்கள் நிச்சயம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்!

இன்றைக்கு நியூயார்க் நகருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவு இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதுமே வரக்கூடும். உணவுப்பட்டியலுடன் கலோரி அட்டவணை தரப் பெறுவதால், உணவருந்தச் செல்பவர்கள் முன்னைவிட கவனத்துடன் உணவை தெரிவு செய்யும் வாய்ப்பும், உணவகங்களும் அதிக கலோரி உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான வாய்ப்புகளை அளிப்பதற்கும் இந்த முடிவு வழியளிக்கிறது. அமெரிக்காவில் கடந்த இருபதாண்டுகளில் சிறிது சிறிதாய் கூடிவந்த "உடற்பருமனை", அடுத்த இருபதாண்டுகளில் பெரிதாய் குறைக்கும் வாய்ப்பும் அளிக்கிறது.

இதே தொல்லையில், இந்தியாவும் நுழைந்து கொண்டிருக்கின்றது, மேற்கத்திய தாக்கத்தில் பீட்ஸாவும் பர்கரும் தினம் உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகையில், இது போன்ற நிகழ்வுகளின் கற்றலினால் "உடற் பருமன்" அளவுக்கு போகாமல் இருந்தால் நல்லது. மேலும், உடல் எடை, தினசரி கலோரி தேவை குறித்த விழிப்புணர்வு பெரிதும் வரவேண்டும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த "உணவு" குறித்த விழிப்புணர்வும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வுமே சரியான வழி!

உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -
1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும் உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்
3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்
4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும், தினம் உண்ணும் உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்
5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும், நேரத்தில் தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்
6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள் (நம்மில் பெரும்பான்மையானவர்கள்) குறைந்தது ஒரு மணி நேரம் நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்


சில தொடர்புடைய தொடுப்புகள்
-----------------------------
http://www.nytimes.com/2008/04/17/nyregion/17calorie.html
http://www.obesityinamerica.org/geographic.html
http://www.obesityinamerica.org/obesitybasics.html

உடற்பருமன் சுட்டி (Body Mass Index Calculator)
http://www.obesityinamerica.org/bmi_calculator.html

http://www.ext.vt.edu/pubs/nutrition/348-951/348-951.html

Super Size Me movie Introduction