Saturday, February 23, 2008

காசு வாங்காத கான்வென்ட்... அசத்தல் அரசுப்பள்ளி!

சகிப்புத் தன்மையும், அர்ப்பணிப்பு குணமும் இருந் தால் அரசுப் பள்ளியைக் கூட கான்வென்ட் ரேஞ்சுக்கு மாற்றிவிட முடியும் என்று நிரூபித்திருக் கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இருக்கிறது மாங்குடி கிராமம். சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கிறது. மாங்குடியை சுற்றியிருக்கிற பத்து கிராமங்களின் ஏழை மற்றும் நடுத் தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கு இதுதான் ஒரே பள்ளி. வழக்கமான அரசுப் பள்ளிகள் போலவே இயங்கி வந்த இங்கே மூன்றாண்டுகளுக்கு முன் ஜோதிமணி என்பவர் தலைமை ஆசிரியராக வந்த பிறகு, மளமளவென மாற்றங்கள்!





மூன்றே ஆண்டுகளில் 'யூனிஃபார்மில் அசத்தும் மாணவ-மாணவிகள், வகுப்பறை தவறாமல் பெஞ்ச்- டெஸ்குகள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் கேபிள் இணைப்புடன் கூடிய டி.வி-க்கள், வகுப்பறைக் குள்ளேயே பைப்பைத் திருகினால் குடிநீர், கம்ப் யூட்டர் கல்வி, தையல் பயிற்சி, கைத்தொழில் பயிற்சிகள்' என பள்ளியை பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜோதிமணி.

இதனால் கவரப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள்... புதுகை,தஞ்சை, சிவகங்கை மாவட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பு கொடுத்து, இந்தப் பள்ளி நடக்கும் விதத்தைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகவும் இப்பள்ளி தேர்வாகியிருக்கிறது.

''எப்படி இப்படி சாதிக்க முடிந்தது?'' என்று ஜோதிமணியிடம் கேட்டோம்.

''இந்தப் பள்ளியில 260 ஸ்டூடன்ட்ஸ் படிக்கிறாங்க. நான் வந்த புதுசில்
மாணவர்கள் மட்டுமில்லை, சில ஆசிரியர்கள்கூட பள்ளிக்கு சரியா வர்றதில்லை. பள்ளிக் கூடத்தைச் சுத்தி ஒரே காடா இருந்துச்சு. இருந்தாலும், நமக்கு குடுத்திருக்கிற வேலையைசரியா செஞ்சாஎல்லாத் தையும் மாத்தி டலாம்னு நெனைச்சேன். அதுக்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

நான் இங்கே வந்த அடுத்த மாசம் தீபாவளி... அப்ப பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு 'இந்த வருஷம் உங்க பிள்ளைகளுக்கு எடுக்கிற டிரெஸ்ஸை யூனிஃபார்மாவே எடுத்துடுங்க'னு சொன்னேன். இதில் சில குழந்தைகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனா, பெற்றோர் அப்படியே செஞ்சாங்க. அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதுக்கப்புறம் காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட் டர் வசதின்னு நீங்க இப்போ பார்க்கிறதுல முக்கால் வாசியை ஆறே மாசத்துக்குள் கொண்டு வந்துட்டோம்'' என்று சொன்னவர்,

''ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு இருந்தாலே போதும் என்கிறது கல்வித்துறை சட்டதிட்டம். நான் இங்கு வந்தபோது, எட்டாம் வகுப்பு படிக்கிறவன் தமிழைப் படிக்கவே தடுமாறினான். ஆனா, இப்ப ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவனுக்கான கல்வி அறிவைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். மாணவிகள் ஒரு வாரமானாலும்கூட ஜடையை அவிழ்த்து கட்டாம வந்துட்டிருந் தாங்க. அதை மாத்துறதுக்காக ஒரு நாள் ஒத்தை ஜடையும், மறுநாள் ரெட்டை ஜடை யும் போட்டுட்டு வரணும்னு கண்டிஷன் போட்டோம். அதுலருந்து தினசரி தலைக்கு எண்ணெய் வைத்து சுத்தமா வாரிக் கொண்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.

மாணவர்களுக் கிடையே கடிதம் எழுதும் திறனை வளர்க்கணும் கிறதுக்காக ஒவ்வொரு வகுப்பறையிலும் தபால் பெட்டிகளை வச்சிருக்கோம். ஒவ்வொரு வகுப் பிலும் மாணவர் களுக்குள்ளேயே ஒரு போஸ்ட்மேனும் போஸ்ட் மாஸ்டரும் இருக்கிறார்கள். மாணவ போஸ்ட் மாஸ்டரிடம் 50 காசு குடுத்தால் அவர் 'கார்ட் போர்டு' அட்டையிலான ஐந்து போஸ்ட் கார்டுகளைத் தருவார். ஸ்டூடன்ட்ஸ் அதை வாங்கி பக்கத்து வகுப்பிலிருக்கும் தனது தோழிக்கோ தோழனுக்கோ கடிதம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிடுவார்கள். அந்தத் தபால்களை எடுத்து உரிய மாணவரிடம் சேர்ப்பது 'போஸ்ட்மேனின்' வேலை.

மாணவர்களுக்குத் தொழிற்கல்வியைக் கத்துக் கொடுக்கிறதுக்காக வருஷத்துக்கு 5,500 ரூபாய் கொடுக்குது அரசாங்கம். அதுல சாம்பிராணி, ஊதுபத்தி செய்யுறதை சொல்லிக் குடுத்தாப் போதும்னு சொல்றாங்க. நாங்க கூடுதலாப் பணத்தைப் போட்டு ரெண்டு தையல் மெஷினை வாங்கிப் போட்டோம். தையல் பயிற்சி குடுக்குறதுக்காக ஒரு டீச்சரையும் நியமித்தோம். இப்ப எங்க பசங்கள்ல பலர் தங்களுடைய டிரெஸ்களை மட்டுமில்லாம அடுத்தவங்களுக்கும் டிரெஸ் தச்சுக் குடுக்கிற அளவு தேர்ந்துட்டாங்க. கிராமத்தினரும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுக்காட்டி என்னால இதையெல்லாம் சாதிச்சுருக்க முடியாது'' என்றார் அடக்கத்துடன்.

நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரே கம்ப்யூட்டர் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாமலிருக்க, இங்கே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்கூட கம்ப்யூட்டரை இயக்கி 'பிரின்ட்-அவுட்' எடுக்குமளவுக்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக ஒரு ஆங்கில தினசரி உள்பட நான்கு தினசரிகளை வாங்கிப் போடுகிறார்கள். இதில் ஒன்றை மாணவர்கள் செலவிலேயே வாங்கிப் போடுகிறார்கள். இவற்றில் வெளிவரும் செய்திகளை பிரேயரில் மாணவர்களே வாசித்தும் காட்டுகிறார்கள். யாராவது ஒரு ஆசிரியர் லீவிலிருந்தால் அவர் நடத்த வேண்டிய பாடம் வகுப்பறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒளிபரப்பாகிவிடும்!

தலைமை ஆசிரியர் ஜோதிமணியைப் பற்றி சக ஆசிரியரான மேகநாதன் நம்மிடம், ''இந்தப் பள்ளியில் ஜோதிமணி சாருக்குக் கீழே நாங்களும் பணிபுரிவதைப் பெருமையா நினைக்கிறோம்'' என் கிறார் நெகிழ்வுடன்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சக்திவேல், ''நாங்க படிக்கிறப்பெல்லாம் பதினோரு மணிக்குத்தான் வாத்தியாரே வருவார். இன்டர்வெலுக்கு வெளியில போனா திரும்ப வரவே மாட்டோம். 'ஏன்வரலை?'னு கேக்குறதுக்குக்கூட ஆள் இருக்காது. ப்ரௌஸிங் சென்டர் வச்சுருக்கிற எனக்கே கம்ப்யூட்டரை முழுமையாக உபயோகிக்கத் தெரியாது. ஆனா, இந்தப் பசங்க சர்வ சாதாரணமா கம்ப்யூட்டர்ல புகுந்து விளையாடுறதைப் பார்த்தா, நாங்க படிச்சப்பவே இந்த மாற்றங்கள் வரலியேனு ஏக்கமா இருக்குங்க'' என்கிறார்.

மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவரான பாலாமணி ரெங்கசாமி, ''எங்க ஊரு பிள்ளைகள்லாம் பணம் வாங்காத கான்வென்ட்ல படிச்சுக்கிட்டிருக்காங்க! இந்தப் பள்ளியோட வளர்ச்சிக்காக எதைக் கேட்டாலும் செஞ்சு குடுத்துட்டுத்தான் மறு வேலை. கூடிய சீக்கிரமே இங்கே இருக்கிற லைப்ரரி ஹாலுக்கு ஏ.ஸி. வசதி பண்ணிக் குடுக்கப்போறோம்'' என்றார் பெருமிதத்துடன்.

அர்ப்பணிப்பு உணர்வு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அரசுப் பணிகளில் அது அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், வாழும் உதாரணமாக விளங்கும் ஜோதிமணி போன்ற விதிவிலக்குகளுக்கு அரசாங்கம் நிறையவே ஊக்கமும் அங்கீகாரமும் தரவேண்டும். அதுதான் அர்ப்பணிப்புக்குத் தருகிற அற்புதமான மரியாதையாக இருக்கும்!
நன்றி :- ஜூனியர் விகடன். Feb 24-28, 2008

17 comments:

Thamiz Priyan said...

பொது மக்களும், ஆசிரியர்களும் சேர்ந்து இப்படிப்பட்ட பள்ளிகளை உருவாக்க முனைந்தால் ஒரு சீரிய சமுதாயம் கிடைக்கும். இதில் மிக முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கே!

அரை பிளேடு said...

நன்று.

பிரேம்ஜி said...

மிக நல்ல முயற்சி. வளரட்டும் அவர் தம் பணி.

Unknown said...

தலைமை ஆசிரியர் திரு ஜோதிமணி நம் பாராட்டுகளுக்கு உரியவர். இவர் மாதிரி, ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தத்தம் வேலையை அர்ப்பணிப்புடன் செய்தாலே, நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்!!

பகிர்ந்தமைக்கு நன்றி!

இவன் said...

தமிழ் பிரியன், அரை பிளேடு, பிரேம்ஜி, தஞ்சாவூரான் தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

1960 மற்றும் 1970 களில் ஆசிரியர் பணி என்பது சிறந்த மரியாதைக்குறியதாக இருந்தது. ஆனால் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிவிட்டது. ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ள ஆட்கள் தற்பொழுது வருவதுகிடையாது. லஞ்ச லாவன்யம் மூலம் வருமானத்திற்கு ஒரு தொழில் என்ற ரீதியில் இப்பணிக்கு வருபவர்களே உண்டு.

1990 களில் நான் படித்த அரசு பள்ளியான பாரதி உயர் நிலை பள்ளிக்கு [ரெட்டிப்பட்டி (கிராமம்) நாமக்கல் (நகரம்)] சுத்துபத்து ஊர்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதற்கு காரணம் அதில் பணிபுரிந்த ஆசிரியர்களே. அதில் பணிபுரிந்த ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை சொந்த பிள்ளைகளாகவே பாவித்தனர். இன்றைய காலகட்டங்களில் இந்த அர்பணிப்பு பெறும்பாலும் குறைந்தே காணப்படுகின்றது.

எனது பள்ளி இக்கட்டுரையில் சொன்னது போல்தான் இயங்கும் என்ன 1990-ல் கணிப்பொறி அவ்வளவு பிரபலம் கிடையாது.

Poov said...

இளைஞர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சை கேக்கும்போது புல்லரிக்கும் மனது, நடைமுறை ஆட்களை பார்க்கும்போது இந்தியாவின் 2020 வல்லரசு என்பது எந்த ஜென்மத்திலும் கனவுதான் என்று நினைத்துக்க்கொண்டிருந்தேன்.

2020 கணவை மெய்ப்பிக்க உழைக்கும் திரு ஜோதிமனி மற்றும் அவருக்கு ஊக்கம் கொடுக்கும் ஊர் மக்களுக்கும் நன்றி.

தகவலுக்கு நன்றி தலைவா!!

பூவேந்திரன்

தருமி said...

ஆசிரிய குலத்திற்கே பெருமை சேர்க்கும் தலைமை ஆசிரியர் திரு. ஜோதிமணி அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

Anonymous said...

//சகிப்புத் தன்மையும், அர்ப்பணிப்பு குணமும் இருந் தால் அரசுப் பள்ளியைக் கூட கான்வென்ட் ரேஞ்சுக்கு மாற்றிவிட முடியும் என்று நிரூபித்திருக் கிறார் ஒரு தலைமை ஆசிரியர்//

மிக உண்மை.நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2008/02/26/superschool/

இவன் said...

பூ, தருமி, டுபுக்கு தங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும்.

டுபுக்கு இப்பதிவுக்கு desipundit-ல் தொடுப்பு தந்தமைக்கு நன்றி.

வெற்றி said...

நன்றி.

இவன் said...

வாங்க வெற்றி உங்கள் வருகைக்கு நன்றி.

சமிப காலமாக தாங்கள் பதிவு எதுவும் இடுவதில்லையே! காரணம் என்னவோ?

குமரன் (Kumaran) said...

ஆகா. படிக்கப் படிக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கே.

இளைய கவி said...

கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைமை ஆசிரியர் என்பதை நிருபித்துவிட்டார் போலும். அவரது பணித்தொடர வாழ்த்தும்.

இளையகவி

Vetirmagal said...

Hats off to the Head Master. Hope the news channels will publicise this school, instead of focussing on Talwar murder.

I wish that the Head Masters of Govt. Schools are given incentives for bringing up their schools. This will prevent some of the Head Masters who throw wet blanket in Voluntary workers' efforts to help them. ( My personal experience).

Or is it wishful thinking?

Meanwhile wishing many more successes to such brave head Masters.

ராமலக்ஷ்மி said...

ஒரு அரசுப் பள்ளி அசத்தல் பள்ளியாக இயங்கும் இப்பதிவைப் படித்ததும் 'இன்பத் தேன் வந்து' அல்லவா 'பாயுது காதினிலே'! எல்லா அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இப்படி ஆகாதா என்கிற என் ஆதங்கத்தைதான் எனது 'கல்விச்சந்தை'யில் கொட்டியிருந்தேன். நேரமிருந்தால் காண்க.
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_29.html

'நல்லது நடக்குதுங்கோ' என இந்த நல்ல விஷயத்தை வலைப்பூவில் ஏற்றியதற்கு நன்றி. இவ் வழியில் என்னும் மென்மேலும் அரசு கல்வியகங்களில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

priya said...

இந்த பதிவ படிக்கும்போது ஒன்னு தோணுதுங்க - நல்லத நெனைச்சா மட்டும் போதாது அதுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பிச்ச நாட்டுல நல்லது நடக்குமுங்கோ !!!!

M.S.தமிழரசன் said...

நானும் ஒரு பள்ளி ஆசிரியனே,இந்த தலைமை ஆசிரியரின் பேட்டியை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தேன்,எனக்கும் ஒரு ஊக்கம் வந்த்தது,நானும் கண்டிப்பாக இப்பணியில் சாதிப்பேன். தகவலுக்கு நன்றி.
பள்ளிக்கு software தேடும் ந்ண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
www.kalvipoonga.blogspot.com
-சு.தமிழரசன்